சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கிய பங்கை ஆற்றிவரும் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆதார் பூனவல்லாவுக்கு இந்தாண்டின் சிறந்த ஆசியருக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.
பூனவல்லாவை தவிர சீன விஞ்ஞானி ஜாங் யோங் ஜென், சீன ராணுவ தளபதி சென் வீ, ஜப்பான் மருத்துவர் ரியூச்சி மோரி, சிங்கப்பூர் பேராசிரியர் ஓய் இங் யாங், தென் கொரிய தொழிலதிபர் சியோ ஜங்-ஜின் ஆகியோருக்கு இந்தாண்டின் சிறந்த ஆசியருக்கான விருதை சிங்கப்பூரின் முன்னணி தினசரி பத்திரிக்கை வழங்கவுள்ளது. இதுகுறித்து அப்பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில், "கரோனாவுக்கு எதிரான போரில் தங்களையே அவர்கள் அர்ப்பணித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய மற்றும் மக்கள் தொகை அதிகமுள்ள கண்டத்தில் Sars-CoV-2 என்ற வைரஸ் காரணமாக பலர் உயரிழந்தனர். பலர் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களின் துணிவு, அன்பு, உறுதி, படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு தலைவணங்குகிறோம். இந்த ஆபத்தான சூழலில், அவர்கள் ஆசியாவிற்கு மட்டுமல்ல உலகுக்கே நம்பிக்கை நட்சத்திரம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1966ஆம் ஆண்டு, ஆதார் பூனவல்லாவின் தந்தை சைரஸ் பூனவல்லா சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தை தொடங்கினார். 2001ஆம் ஆண்டு, இந்நிறுவனத்தில் சேர்ந்த ஆதார் பூனவல்லா, 2011ஆம் தலைமைச் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.