புனே: டிக்-டாக் பிரபலம் பூஜா சவான் மரணம் குறித்து பேசாமல் இருக்க அவரது பெற்றோருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் பணம் கொடுத்ததாக பூஜா சவானின் குடும்ப உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சவானின் மரணம் குறித்து பேசாமல் இருக்க 5 கோடி ரூபாய் அவரது பெற்றோருக்கு கொடுக்கப்பட்டதாக பூஜா சவானின் பாட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பான வழக்கு புனே காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பூஜா சவானின் மரணத்தில் முன்னாள் அமைச்சர் சஞ்சய் ரத்தோட்க்கு தொடர்பு இருப்பதாக ஆடியோ ஒன்று வெளியானது. இதைத்தொடர்ந்து அவரை பாஜகவினர் ராஜினமா செய்ய வலியுறுத்திவந்தனர். ராஜினமா செய்யவில்லை என்றால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்தவிடமாட்டோம் எனவும் பாஜகவினர் அறிவித்திருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று (பிப்ரவரி 28) அமைச்சர் பதவியை ராஜினமா செய்த சஞ்சய் ரத்தோட், தனக்கும் பூஜா சவானின் மரணத்திற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்திருந்தார்.
பிப்ரவரி 8ஆம் தேதி 22 வயதான பூஜா சவான் புனேவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஆங்கிலம் கற்பதற்காக புனே வந்த அவர் தற்கொலை செய்துகொண்ட இரண்டு நாளில் ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இதைத்தொடர்ந்து, சவான் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரபல மாடல் தற்கொலை விவகாரம்; சிவசேனா அமைச்சர் ராஜினாமா