புதுச்சேரி: அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் மாஞ்சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதி சதாசிவம் - விஜயலட்சுமி. இவர்களது மகன் பிரவீன்(19). ரவுடியான இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு அரியாங்குப்பம் சுப்பையா நகரில், நடந்த ஜிம் பாண்டியன் கொலையில் பிரவீனுக்கும் தொடர்பு இருந்தது.
அப்போது பிரவீன் சிறுவன் என்பதால் அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் நேற்று இரவு ஆர்.கே. நகரில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் பதுங்கி இருந்த மர்மகும்பல் திடீரென்று பிரவீனை வழிமறித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். பிரவீனை ஓட ஓட விரட்டிச்சென்ற அந்த கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, கால்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த படுகொலை பற்றி தகவல் அறிந்த தெற்கு பகுதி போலீசார் ரவிக்குமார், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பிரவீன் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ரவுடியை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 64 வயது அமெரிக்க மூதாட்டி பாலியல் வன்புணர்வு - 30 வயது இளைஞர் கைது