கான்பூர் : உத்தர பிரதேசம் மாநில காவல் துறை ஆய்வாளர் தர்மேந்திர யாதவ் என்பவரின் மகன் சன்னி, தனது கூட்டாளிகள் 6 பேருடன் இணைந்து சமூக வலைதளத்தில் போலி கணக்கு மூலம் பழக்கமான இளைஞரை வரவழைத்து கடுமையாக தாக்கி, சிறுநீரை குடிக்கச் சொல்லி வற்புறுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கான்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆயுஷ் என்பவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் திவ்யான்ஷி பாண்டே என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் ஒரு மாத காலமாக தொடர்ந்து பேசி வந்த நிலையில், தங்களது தகவல்கள் குறித்து பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு உள்ளனர். இந்நிலையில், ஆயுஷை நேரில் சந்திக்க விரும்புவதாக அந்த பெண் விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், இருவரும் ஒர் இடத்தை தேர்வு செய்து சந்திக்க திட்டமிட்டு உள்ளனர்.
அதன்படி தனது இரு சக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயுஷ், தனது இன்ஸ்டாகிராம் தோழியின் வருகைக்காக காத்து கிடந்து உள்ளார். அப்போது ஆயுஷூ எதிர்பாரத விதமாக அங்கு காவல் ஆய்வாளர் தர்மேந்திர யாதவ் என்பவரின் மகன் சன்னி, தனது கூட்டாளிகள் 6 பேருடன் வந்து உள்ளார்.
அதன்பின் தான் ஆய்ஷ்க்கு தெரியவந்து உள்ளது, தன்னிடம் கடந்த ஒரு மாதமாக பெண் போன்று பேசியது சன்னி என்று. திவ்யான்ஷி பாண்டே என்கிற பெயரில் சன்னி போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி கடந்த ஒரு மாத காலமாக ஆயுஷுடன் பேசி வந்து உள்ளார். சன்னியுடன் வந்த 6 பேரும் ஆயுஷை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஆயுஷை சிறுநீரை குடிக்கச் சொல்லி சன்னி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே காவல் ஆய்வாளர் தர்மேந்திர யாதவ், ஆயுஷ் முகத்தில் எச்சிலை துப்பி, தனது ஷூவை நாக்கால் சுத்தம் செய்யக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து ஆயுஷை காரில் தூக்கிக் கொண்டு கோபர்கஞ்ச் ரயில்வே பகுதிக்குச் சென்று, அங்கும் தாக்கிய தர்மேந்திர யாதவ், தனது துப்பாக்கியால் சுட்டதாகவும் சொல்லப்படுகிறது.
துப்பாக்கிச் காது அருகே பயணித்து நூலிழையில் ஆயுஷ் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ஆயுஷ் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தர்மேந்திர யாதவ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான சன்னியை வலைவீசி தேடி வருகின்றனர்.
சன்னி மீது இது முதல் முறையாக பதிவு செய்யப்பட்ட வழக்கு அல்ல என்றும், ஏற்கனவே இது போன்று தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட போது காவல் துறையில் உள்ள தனது தந்தை தன்னை காப்பாற்றிவிடுவார் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்ன காரணத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்படாத நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருகை? சமாதானமா? சண்டையா?