புதுச்சேரி அருகே ஜீவனாந்தபுரம் பகுதியைச்சேர்ந்த பிரபல ரவுடி சாலமன்(25). இதனிடையே இவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சாலமன், இளம்பெண் ஒருவரை கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையே நேற்று (ஜூலை 30) புதுச்சேரி-தமிழ்நாடு மாநில எல்லையான நாவற்குளம் பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு சென்ற சாலமனை, அங்கு வந்த கும்பலைச்சேர்ந்தவர்கள் அழைத்துள்ளனர். அப்போது அவர், செல்ல மறுக்கவே அங்கு சென்ற ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாலமனை வெட்டியுள்ளார்.
பின், அங்கிருந்து தப்பியோட முயன்ற சாலமனை விடாமல் விரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்து தப்பினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கோரிமேடு போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனையடுத்து கோரிமேடு போலீசார் கொலைச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்துத்தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவ இடத்தில் தமிழ்நாடு பகுதியான ஆரோவில் மற்றும் புதுச்சேரி பகுதியான கோரிமேடு போலீசார் ஒரே நேரத்தில் குவிந்ததால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, கொலை செய்யப்பட்ட சாலமன் மீது புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பகுதியில் பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போலீஸ் கேண்டீனில் ஆய்வு செய்த டிஜிபி