என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜேஇஇ பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் பொதுத்தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டுவருகிறது.
இதனிடையே, நீட் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த கோரிக்கைவிடுக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்து பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், "மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து நீட் தேர்வுகளை நடத்திவருகிறது. 2021ஆம் ஆண்டு, நீட் தேர்வு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும்" என்றார்.
இருப்பினும், அடுத்தாண்டு, நீட் தேர்வு இரண்டு முறை நடத்தப்படுமா என்பது குறித்து அவர் பதிலளிக்கவில்லை. இந்தாண்டு, ஆகஸ்ட் மாதம், 11 மொழிகளில் நீட் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.