சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்தநிலையில் புதுச்சேரி அடுத்த திருபுவனை சென்ட்ரல் திரையரங்கின் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருபுவனை தொகுதி பாமக செயலாளர் விஜயசாரதி துணைத்தலைவர் பால பழனி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திருபுவனை தொகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் வன்னியர் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி தியேட்டர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திரைப்படத்தை திரையிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் ள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து திரைப்படம் திரையிடுவது தள்ளி வைக்கப்பட்டது. சூர்யாவின் திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சில ரசிகர்கள் திரைப்படத்தை வெளியிடுமாறு நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்கள், இருந்தபோதிலும் திரைப்படம் திரையிடப்பட வில்லை. மேலும் தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த சூர்யா பேனரை போராட்டக்காரர்கள் அகற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆசிரமம் கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.82 லட்சத்தை மீட்டுக்கொடுங்கள் - 92 வயது துறவி புகார்