ஒடிசா மாநிலம் சம்பல்பூர் நகரில் அமைந்துள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்திற்கான நிரந்தர வளாகத்திற்கு பிரதமர் மோடி ஜனவரி 2ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டவுள்ளார். அதற்கான கட்டுமான பணிகள் 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சம்பல்பூர் ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மகாதியோ ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடத்தில் மாசற்ற ஆற்றல் திறன் கொண்ட அம்சங்கள் இடம்பெறவுள்ளன. பெரும்பான்மையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் வகையில் புதிய வளாகம் கிரிகா தரத்தில் கட்டப்படவுள்ளது. ஒடிசாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உள்கட்டமைப்பு அமைக்கப்படும்" என்றார்.
ஒடிசா ஆளுநர் கனோஷி லால், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் பலர் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் உயர்மட்ட அலுவலர்கள், தொழிலதிபர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகிகள், ஐஐஎம், ஐஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் என 5,000க்கும் மேற்பட்டோர் அந்த விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்ளவுள்ளனர்.
சம்பல்பூர் ஐஐஎம் கல்வி நிறுவனத்தை கட்டுவதற்கு மாநில அரசு 200 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இதனை கட்டுவதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் தொடர் நிர்வாக ஆதரவை அளித்துவரும் நிலையில், கட்டுமான பணிகளுக்கு 401.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.