டெல்லி: தலைநகர் டெல்லியில் G20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 9 மற்றும் 10) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து பல முக்கிய தலைவர்கள் டெல்லிக்கு வருகை புரிந்துள்ளனர். இது உலக அளவில் இந்தியா தன்னுடைய உறவை வலுப்படுத்தவும், உலக அளவில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தயாராகியுள்ளார்.
G20 உச்சி மாநாடு நாளை (செப்.9) தொடங்கப்பட உள்ள நிலையில் இன்று (செப்.8) மொரீஷியஸ், வங்கதேசம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தரப்பு பேச்சு வார்த்தையில் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாளை (செப்.9) இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. இந்த இருதரப்பு பேச்சு வார்த்தைகள் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் விரிவுப்படுத்தப்படும் மேலும் பல நாடுகளுக்கு இடையே உறவு வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: G20 Summit: ஜி20 மாநாட்டில் இந்தியா நிலைநிறுத்தும் பிரதிநிதித்துவம் என்ன? - பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்
G20 உச்சி மாநாட்டின் கடைசி நாளான நாளை மறுநாள் (செப்.10) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் மதிய உணவு சந்திப்பு இடம் பெற உள்ளது. அப்போது பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதமாக எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவருகின்றன மேலும் பிரதமர் மோடி, கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், கொமோரோஸ், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்புப் பணியில் டெல்லி காவல்துறை 50,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள், K9 நாய்ப் படைகள் உள்ளன. மேலும் டெல்லி விமான நிலையம் முதல் ஹோட்டல்கள் வரையும் மற்றும் ஹோட்டல்கள் முதல் G20 உச்சி மாநாடு வரை முழு கட்டமைப்புகளுடன் உலக தலைவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் டெல்லி காவல்துறை உடன் இணைந்து இந்திய விமானப்படை (IAF), தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) போன்ற சிறப்பு மத்திய அமைப்புகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. இந்த அனைத்து படைகளில் கூட்டு முயற்சியில் பாதுகாப்பான சூழ்நிலையில் G20 உச்சி மாநாடு நடைபெற உள்ளன. மேலும் அனைத்து உலக தலைவர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் இருதரப்பு சந்திப்புகள் இந்தியாவிற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலக நாடுகளுடனான இந்தியாவின் ஒற்றுமை வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமோர்-லெஸ்டே நகரில் இந்திய தூதரகம்; ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் அறிவிப்பு!