நாடு முழுவதும் நாளை (நவம்பர் 13) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "நண்பர்களே, இந்தப் பண்டிகை காலத்தில்கூட தங்களது குடும்பங்களை மறந்து, நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்து, பாரத மாதாவுக்கு சேவை செய்துவரும் ராணுவ வீரர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தீபாவளி விழா அன்று அவர்களது தியாகத்தை நினைவில் கொண்ட பின்னரே நாம் கொண்டாட வேண்டும். அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு நாம் நன்றியுணர்வை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்திட முடியாது.
எனவே, இந்திய தேசத்தின் தியாகப் புதல்வர்களுக்கும் புதல்விகளுக்கும் அவர்களது தைரியத்தை, தியாகத்தைப் போற்றும் வண்ணம் ஒவ்வொருவரும் ஒரு விளக்கு ஏற்றிட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.