மும்பை: இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'வந்தே பாரத் 2.0' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டது. அதன்படி, வந்தே பாரத் ரயில்கள் கூடுதலாக புதிய அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை எட்டு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் சேவை மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் இன்று(பிப்.10) தொடங்கப்படவுள்ளன. 9வது வந்தே பாரத் ரயில், மும்பை - சோலாப்பூர் இடையிலும், பத்தாவது ரயில் மும்பை - சாய்நகர் சீரடி இடையிலும் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் சேவையை மும்பை ரயில் நிலையத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மும்பை-சோலாப்பூர் ரயில், பயணிகள் மும்பையிலிருந்து, சோலாப்பூரில் உள்ள சித்தேஷ்வர், அக்கல்கோட், துல்ஜாபூர், பந்தர்பூர் போன்ற புனிதத்தலங்களுக்கு விரைவாக செல்ல பயன்படும் என்றும், அதேபோல் மும்பை - சாய்நகர் சீரடி ரயில், மும்பையிலிருந்து நாஷிக், திரிம்பகேஷ்வரர், சீரடி உள்ளிட்ட புனிதத்தலங்களை இணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இயக்கப்படும் மற்ற விரைவு ரயில்களுடன் ஒப்பிடும்போது, இரண்டு வந்தே பாரத் ரயில்களும், பயண நேரத்தில் ஒன்றரை மணி நேரத்தை மிச்சப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதானி குழுமத்திற்கு எதிரான மனு நாளை விசாரணை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!