டெல்லி: செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டிற்காக உஜ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட்டிற்க்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ளார். SCO என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குழுவாகும். இதில் சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
சென்ற ஜூன் 2019 ஆம் ஆண்டு கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் SCO உச்சி மாநாடு நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இருதரப்பு சந்திப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. இருப்பினும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2019 நவம்பரில் பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்தித்தனர்.
ரஷ்யா-உக்ரைன் போரின் வீழ்ச்சி, தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும்.
சமர்கண்ட் உச்சி மாநாட்டின் முடிவில் எஸ்சிஓவின் சுழற்சி முறையிலான தலைவர் பதவியை இந்தியா ஏற்கும். இதன் மூலம் செப்டம்பர் 2023 வரை ஒரு வருடத்திற்கு குழுவின் தலைவராக இந்தியா பொறுப்பேற்க்கும். அடுத்த ஆண்டு, இந்தியா SCO உச்சி மாநாட்டை நடத்தும், இதில் சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பீரங்கிகள் முழங்க ராஜாவாக பதவியேற்றார் மூன்றாம் சார்லஸ்..!