டெல்லி: மேற்கு வங்கத்தில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 17ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐந்தாம்கட்ட தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட தலைவர்கள் தயாராகிவருகின்றனர்.
அந்த வகையில், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை நிலைநாட்டும் முனைப்பில் பாஜக தலைவர்கள் பலரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். நரேந்திர மோடியும், அமித் ஷாவும் கடந்த நான்கு கட்ட தேர்தலில் பல கட்டங்களாகத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.
இதையடுத்து, ஐந்தாம்கட்ட தேர்தலுக்காகத் தற்போது நரேந்திர மோடியும், அமித் ஷாவும் இன்று பலகட்ட தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, மோடி மதியம் 12 மணிக்கு பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் உள்ள தலித் சாய் மையத்திலும், மதியம் 1.40 மணிக்கு நதியா மாவட்டத்தில் கல்யாணி பல்கலைக்கழக மைதானத்திலும், தொடர்ந்து பிற்பகல் 3.10 மணிக்கு வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பராசத் பகுதியிலும் பேரணி மேற்கொள்ள உள்ளார்.
அதேபோல் அமித் ஷா, காலை 11.30 மணிக்கு கலிம்பொங் மாவட்டத்திலும், பின்னர் ஜல்பைகுரி மாவட்டத்தின் துப்குரி பகுதியிலும், ஹெம்தாபாத் விதான் சபா தொகுதியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இவர் சிலிகுரியிலும் சாலைவழிப் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.