சண்டிகர் : ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான குழுவினர் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை வெள்ளிக்கிழமை (ஜன.7) சந்தித்து பேசினர்.
அப்போது, “பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் பஞ்சாப் அரசு கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளது, ஆகவே அந்த அரசை நீக்கிவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.
ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் லால் கட்டார், “நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. பஞ்சாபில் பிரதமரின் திட்டத்தில் தடைகள் ஏற்படுத்தப்பட்ட விதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் ஃபெரோஸ்பூர் பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடங்கள் காத்திருந்தார்.
இந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகை குஷ்பூ, பொன்னார் உள்பட 153 பேர் வழக்குப்பதிவு