டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று(மே.29) முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது வடகிழக்கு மாநிலங்களின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையாகும்.
இந்த ரயில் அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரையும், மேற்குவங்க மாநிலத்தின் நியூ ஜல்பைகுதிரி நகரையும் இணைக்கிறது. இந்த வழித்தடத்தின் பயண நேரத்தை வந்தே பாரத் ரயில் சேவை ஒரு மணி நேரம் வரை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில்கள் மோதலை தடுக்கும் கவாச் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, "முந்தைய ஆட்சியாளர்களால் வடகிழக்கு மாநிலத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களுக்கான ரயில்வே பட்ஜெட் 2,500 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நான்கு மடங்கு வளர்ச்சியாகும்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில், வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் அகல ரயில்பாதை விரைவில் அமைக்கப்படும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா வரலாறு காணாத சாதனைகளை புரிந்துள்ளது. பாஜக அரசு ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்தது. எந்தவித பாகுபாடும் இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.
அசாமில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த வந்தே பாரத் ரயில், கமாக்யா கோயில், காசிரங்கா சரணாலயம், அசாமில் உள்ள மனாஸ் புலிகள் சரணாலயம், மேகாலயாவின் ஷில்லாங்-சிரபுஞ்சி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் போன்ற முக்கிய இடங்களை இணைக்கிறது. இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்படும்.
வடகிழக்கு பிராந்தியம் இன்று அதன் முதல் வந்தே பாரத் ரயிலை பெற்றுள்ளது. மேற்குவங்கத்தை இணைக்கும் மூன்றாவது வந்தே பாரத் ரயில் இது. அசாம் மற்றும் மேகாலயாவில் சுமார் 425 கிலோ மீட்டர் ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பட்டு வருகிறது, இதனை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்த உட்கட்டமைப்பு வசதிகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது, வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். இது தமிழ்நாட்டிற்குள்ளேயே இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயிலாகும்.