நியூயார்க் : இந்தியாவில் தோன்றிய யோகா மிகவும் தொன்மையான பாரம்பரியம் என்றும் அனைவருக்குமான யோகா காப்புரிமை, பேட்டென்ட், ராயல்டி கொடுப்பனவு உள்ளிட்டவைகளுக்கு விதிவிலக்கு பெற்றது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா பொதுச் சபையின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இதில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 25 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகா இந்தியாவில் உருவான உலகின் மிகவும் தொன்மையான பாரம்பரியம் என்றும், யோகா எந்த ஒரு நாடு, மதம் அல்லது இனத்துக்கும் சொந்தமானது அல்ல அனைவருக்குமானது என்று கூறினார். மேலும், யோகா காப்புரிமை, ராயல்டி கொடுப்பனவுகளுக்கு விதிவிலக்கு பெற்று உலக மக்கள் அனைவருக்குமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
யோகா அனைத்து வயது, பாலினம் மற்றும் உடற்பயிற்சி நிலைக்கு ஏற்றது என்றும் உண்மையிலேயே யோகா உலகளாவிய கலை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதற்கான இந்தியாவின் முன்மொழிவுக்கு முழு உலகமும் ஆதரவு அளித்த நிலையில் ஒட்டுமொத்த உலகமும் யோகாவிற்காக மீண்டும் ஒன்றிணைவதை பார்க்க வியப்புக்குரிய வகையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மனிதநேயத்தின் சந்திப்பு முனையாக அனைவரும் ஒன்று கூடி உள்ளதாகவும், உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஒவ்வொரு தேசியமும் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக கூறிய பிரதமர் மோடி யோகா என்றால் ஒன்றுபடுவது என்று அர்த்தம் என்றும் அனைத்து தரப்பினரும் ஒன்றாக வருவது என்பது யோகாவின் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு என்று கூறினார்.
இந்த விழாவில் 77வது ஐநா பொதுச் சபையின் தலைவர் Csaba Korosi, நடிகர் ரிச்சர் கிரே மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ். பத்திரிக்கையாளர் வாலா அப்ஷர், புகழ் பெற்ற கதை ஆசிரியர் ஜே ஷெட்டி, இந்திய சமையல்காரர் மற்றும் உணவக உரிமையாளர் விகாஸ் கன்னா மற்றும் கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் தூதர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள், ஊடகத் துறையினர், கலைஞர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் உட்பட அனைத்து தரப்பு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : உள்ளூர் அரசுகளுக்கு கீழ் படியாவிட்டால் ட்விட்டரை மூடும் அவலம் - எலான் மஸ்க் ஆதங்கம்!