டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்ச்சித்தார். அந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் அதானி குழும விசாரணை குறித்து கேள்வி எழுப்பின. இருப்பினும், பிரதமர் மோடி தனது உரையை பேசி முடித்தார்.
இந்த உரை குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறுகையில், பிரதமர் மோடியின் உரையிலேயே அவர் அதானியை பாதுகாக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அவரது உரையில் அதானி பற்றி எதுவும் பேசவில்லை.
இந்த உரையில் எனக்கு திருப்தி இல்லை. இதுதேசிய பாதுகாப்பு பிரச்சினையாகும். ஆகவே, பிரதமர் மோடி அதானி குழும விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து மோசடி குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. இதன் காரணமாக அதானி குழும நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்தன.
குறிப்பாக 8 நாளில் 9 லட்சம் கோடி ரூபாய் பங்குகளை அதானி குழுமம் இழந்தது. இந்த குழுமத்துக்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் வங்கிகள் மூலம் கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அதோடு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அமளியில் ஈடுபட்டன. இருப்பினும், மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிடவில்லை. ஆனால், அதானி குழுமத்துக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை - பிரதமர் மோடி