டெல்லி: மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று(அக்.30) 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், சூரிய சக்தி மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருவதாகத் தெரிவித்தார். இந்தியா தனது பாரம்பரிய அனுபவங்களை நவீன அறிவியலுடன் இணைத்து வருகிறது. அதனால்தான், சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி இருக்கிறது என்று தெரிவித்தார்.
சூரிய ஆற்றல் என்பது நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்ற விவசாயி பிரதமர் குஷூம் யோஜனா (PM Kusum Yojna) திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார் என்றும், அவரது பண்ணையில் 10 குதிரைத் திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டை அமைத்துள்ளார் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அவர் பண்ணையில் விவசாயத்திற்கென செலவு எதுவும் செய்வது இல்லை என்றும், பாசனத்திற்காக அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
சூரிய சக்தியைப் போலவே விண்வெளி துறையிலும் இந்தியா பல சாதனைகளை செய்து வருகிறது என்றும், அதன் சாதனைகளைக் கண்டு உலகமே ஆச்சரியப்படுவதாகவும் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது என்றும், அது இந்தியாவிற்கு தீபாவளிப் பரிசாக அமைந்தது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க: சாத் பண்டிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!