இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் நடைபெற்ற இரண்டாவது இமாச்சலப்பிரதேச உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் ரூ.11,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள நீர்மின் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இமாச்சலப் பிரதேசத்துடனான தமது உணர்ச்சிப்பூர்வ பிணைப்பு உள்ளது. இந்த மாநிலமும் அதன் மலைப்பகுதிகளும் தமது வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்துள்ளன. மத்தியில், மாநிலத்தில் பாஜக அரசு நான்கு ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்திருப்பதற்காக இமாச்சலப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துகள். இந்த நான்கு ஆண்டு காலத்தில், இம்மாநிலம் பெருந்தொற்று சவாலை எதிர்கொண்டதுடன் வளர்ச்சியின் உச்சத்தையும் எட்டியுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறனில் 40 விழுக்காட்டை புதைப் படிமம் அல்லாத வளங்கள் மூலம் மேற்கொள்வதென 2016இல் இந்தியா இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை இந்தியா 2021ஆம் ஆண்டு நவம்பரிலேயே எட்டியிருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை அளிக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும், நாட்டைப் பாதுகாக்கக் கூடிய தீரமிக்க புதல்வர்களும், புதல்விகளும் உள்ளனர். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க கடந்த ஏழு ஆண்டுகளில் எங்களது அரசு மேற்கொண்ட பணி, வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் நலனுக்காக மேற்கொண்ட முடிவுகள், இமாச்சலப்பிரதேச மக்களுக்கும் பயன் அளித்துள்ளது" எனப் பேசினார்.
இதையும் படிங்க: Niti Ayog Health Index: இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு