பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதான கட்சிகளின் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று (மே 7) 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடியைப் பூக்கள் தூவி வரவேற்றனர். அதேநேரம், போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் மாநில போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
பெங்களூருவில் உள்ள நியூ திப்பசந்தரா சாலையில் இருக்கும் கெம்பெ கவுடாவின் சிலையில் இருந்து இன்றைய பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது, அங்கு இருந்த பெங்களூரு நகரத்தின் நிறுவனர் கெம்பெ கவுடாவின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, ஹெச்ஏஎல் 2வது பகுதி, 80 அடி சாலை சந்திப்பு, 12வது பிரதான சாலை சந்திப்பு, 100 அடி சந்திப்பு, இந்திரா நகர், சுப்ரமணியசுவாமி கோயில் மற்றும் ட்ரினிட்டி சர்க்கிள் வழியாக எம்.ஜி. சாலைக்கு செல்கிறார். இந்த வீதி பிரசாரத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி சிவமோகா மாவட்டத்தில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசார கூட்டத்திற்குச் செல்கிறார்.
இந்த கூட்டம் சிவமோகாவில் உள்ள அயனுரு அரசு ப்ரீ-கிராஜுவேஷன் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. இது குறித்து சிவமோகா மாவட்ட பாஜக தலைவர் டிடி மேகராஜ் கூறுகையில், “100 ஏக்கர் நிலத்தில் இந்த பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். இதில் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பிரதமர் உரையாற்றுவார்” எனத் தெரிவித்தார்.
அதேநேரம், பிரதமர் மோடி, சிவமோகா மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகள், தேவநாகிரியில் உள்ள 2 தொகுதிகள் மற்றும் சிக்கமகளூருவில் இருக்கும் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதி வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொள்கிறார். இதனை ஒட்டி, 10 தொகுதிகளில் இருந்து தலா 30 ஆயிரம் பொதுமக்கள் என மொத்தம் 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக அயனுருக்கு வெளியே வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, மைசூரு மாவட்டத்தில் உள்ள நஞ்சங்குடு தாலுகாவில் இருக்கும் இலசெகிரி கிராமத்தில் திறந்த வெளியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்.
இது குறித்து நிகழ்வின் ஏற்பாட்டாளரான சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.ராமதாஸ், “இந்தக் கூட்டத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்பார்கள். நிகழ்வுக்கு முன்னாள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ரைடர்கள் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
விழா நடைபெறும் மேடைக்கு 4.35 மணிக்கு வரும் பிரதமர் மோடியின் நிகழ்வு, 5.25 மணிக்கு முடிவடையும். இந்த பேரணிக்குப் பிறகு, மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, 6.45 மணிக்கு நஞ்சங்குடு கோயிலில் கணபதி, சுப்ரமணியன், ஆதி நாராயணன் மற்றும் பார்வதி தேவியை பிரதமர் தரிசனம் செய்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி, ஸ்ரீகாந்தேஸ்வரரருக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். இதனையடுத்து, பிரதமர் மோடி டெல்லிக்குச் செல்கிறார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: Karnataka election : "கர்நாடகாவுக்கு யாருடைய ஆசீர்வாதமும் தேவையில்லை" - சோனியா காந்தி பளீச்!