அகமதாபாத்(குஜராத்):பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.10) சுமார் 8,000 கோடி மதிப்புள்ள நாட்டிற்கான திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளார். மேலும், அகமதாபாத்தில் கல்வித் தேவையிலுள்ள மாணவர்களுக்கு ’மோடி ஷாயிக்ஷானிக் சன்குல்’ எனும் கல்வி வளாகம் ஒன்றைத் தொடங்கிவைக்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஜம்புசாரில் மருந்துப் பூங்கா, டஹேஜில் ஆழ்கடல் குழாய் திட்டம், தொழிற்சாலைப் பூங்காக்களின் விழாக்கள் எனப் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபெற உள்ளார். மேலும், ஆனந்த் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியிலும் பங்குபெறுவார். அதையடுத்து, மாலை ஜம்நகரில் சுமார் 1460 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் நீர்பாசனம், சக்தி, நீர்வளம், நகர வளர்ச்சி ஆகியவற்றை மையப்படுத்தியுள்ளது.
மூன்று நாள் குஜராத் பயணத்தின் முதல் நாளான நேற்று(அக்.9) மோதேரா கிராமத்தை இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமமாக அறிவித்தார். அந்த கிராமத்தில் 1000 சோலார் பேனல்கள் வைக்கப்பட்டு 24 மணிநேரமும் கிராம மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும் வண்ணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.