கோவா (பனாஜி): பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதிமுதல் மார்ச் 7ஆம் தேதிவரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் பணிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் அங்கு மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கோவாவில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். கோவாவின் டபோலிம் சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் பேசினார்.
வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமை
அப்போது, "நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடவுளின் அம்சங்கள் இருப்பதைக் காண்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர். ஒருவரால் எப்படி இவ்வளவு வேலைகள் செய்ய முடிகிறது?
நான் முதலமைச்சர் என்பதாலும், பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலும் இதைச் சொல்லவில்லை. என் மனத்தில் பட்டதை கூறினேன். நம் நாட்டிற்கு நரேந்திர மோடி பிரதமராகக் கிடைத்திருப்பது நம் நற்பேறு. அவர் சிறந்த சிந்தனையாளர்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அவர்கள் சென்ற இடமெல்லாம் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளனவா? காங்கிரஸ் ஆட்சியில், நாங்கள் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்று சொன்னால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் புறக்கணித்தனர். பெருமையுடன் பார்க்க மாட்டார்கள். ஆனால் நரேந்திர மோடி வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமையை மீட்டெடுத்துள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்