சீக்கிய மதத்தின் குருவான குருநானக் தேவின் 551ஆவது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், மனதில் குரல் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதற்கான வாழ்த்துகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "குருநானக் தேவின் 551ஆவது பிறந்த ஆண்டினை நாம் கொண்டாட இருக்கிறோம். உலகம் முழுவதிலும் அவரின் தாக்கம் தெள்ளத்தெளிவாகக் காணக் கிடைக்கிறது.
வான்கூவர் முதல் வெல்லிங்டன் வரை, சிங்கப்பூர் முதல் தென்னாப்பிரிக்கா வரை அவருடைய செய்தி அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கிறது. குருக்ரந்த் சாஹிபில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், சேவை செய்பவருடைய பணி, தொடர்ந்து சேவை ஆற்றி வருவது தான்.
கடந்த சில ஆண்டுகளாக பல முக்கியமான கட்டங்கள் வந்தன, ஒரு சேவகன் என்ற வகையில் பல செயல்களைச் செய்யக்கூடிய ஒரு சந்தர்ப்பம் நமக்கெல்லாம் வாய்த்தது. உலகெங்கிலும் சீக்கிய சமூகத்தினர் கரோனா நிலவும் இந்த வேளையில் மக்களுக்கு உணவளிக்கும் தங்கள் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்தார்கள்.
மனிதசேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளிக்கக்கூடிய பணியை நமக்கெல்லாம் புரிகிறது. நாமனைவருமே சேவகர்கள் என்ற உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றார்.