டெல்லி : நாடாளுமன்ற அவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிரதமர் மோடி நலம் விசாரித்தார். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை. 20) காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை மழைக் கால கூட்டத் தொடரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு மக்களவைக்கு வந்தார். அப்போது இருக்கையில் அமர்ந்து இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பார்த்த பிரதமர் மோடி உடனடியாக சென்று அவரிடம் நலம் விசாரித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தான் நலமுடன் இருப்பதாக சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூருவி நடந்த அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து விட்டு சோனியா மற்றும் ராகுல் காந்தி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் சோனியா காந்தி விமானத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டார். பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து விட்டு டெல்லி திரும்பிக் கொண்டிருந்த போது போபால் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதிலும், தனது தாயார் அழுத்தத்தின் கீழ் அமைதியாகவும் அழகாகவும் இருப்பதாக ராகுல் காந்தி பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் விவகாரம், டெல்லி அவசர சட்டம் என நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் ஆளும் பாஜகவை கேள்விகளால் துளையிட எதிர்க்கட்சிகள் காத்திருந்த நிலையில், சோனியா காந்தியை, பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தது அரசியல் நாகரீகத்தின் தருணமாக கருதப்பட்டது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பதற்றம் நிலவி வரும் போதிலும் அதை களைந்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து நலம் விசாரித்தது அவர் மீதான மரியாதை உணர்வை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் குக்கி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் அடித்து துன்புறுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த இரு பெண்கள் பலமுறை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த மே 4ஆம் தேதி வாக்கில் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி தனியாக பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதையும் படிங்க : அமெரிக்காவில் மின்னல் தாக்கி இந்திய மாணவி மூளை சேதம்! சொந்த ஊர் அழைத்து வர பெற்றோர் போராட்டம்