ஹைதராபாத்: ஆன்மிகத் துறவியான ஸ்ரீ ராமானுஜருக்கு மரியாதை செலுத்தும்விதமாக சமத்துவச் சிலை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது. நம்பிக்கை, சாதி, மதம் உள்பட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அவர் சமத்துவத்தை ஊக்குவித்தார். ஸ்ரீ ராமானுஜரைப் போற்றும்வகையில், அவரது 216 அடி சமத்துவச் சிலையை நரேந்திர மோடி இன்று திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் கூட்டத்தில் உரை நிகழ்த்திய நரேந்திர மோடி, "வேரிலிருந்து விலகிச் செல்வதன் மூலம் மட்டுமே மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியும் என்ற பொதுவான கருத்து இருக்கிறது, ஆனால் ராமானுஜரின் சொற்களை உற்று நோக்கும்போது, வேர்களை விட்டு நகர வேண்டிய அவசியமில்லை என்பது தெளிவாகிறது.
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கிய ராமானுஜர்
சமூக முன்னேற்றம் பற்றிய விவாதங்கள் நடக்கும்போது, கடந்த காலத்திலிருந்து விலகிச் செல்வதன் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், ராமானுஜரின் சொற்களைப் பார்க்கும்போது, முன்னேற்றத்திற்காக, வேர்களை விட்டு நகர வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் காண்கிறோம்.
தத்துவ வரலாற்றில், பொதுவாக, ஒரு வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில், ஞானிகள் அதை ஏற்றுக்கொள்வதற்கும் மறுப்பதற்கும் அப்பால் சென்றுவிட்டனர்.
ஒரு பொதுவான கண்ணோட்டத்தில், முரண்பாடாகத் தோன்றும் மதிப்புகளை ராமானுஜர் சிரமமின்றி இணைத்தார். அவர் தனது வாழ்க்கையை அறப்பணிக்காக அர்ப்பணித்தார். அவர் சமஸ்கிருத புத்தகங்களை எழுதினார், ஆன்மிக மரபில் தமிழ் மொழிக்கு சமமான முக்கியத்துவம் கொடுத்தார்.
சமத்துவச் செய்தி அளிக்கு சமத்துவச் சிலை
தீண்டாமையை ஒழிப்பதற்கான குறிப்புகளை ராமானுஜர் வழங்கினார். பாபா சாகேப் அம்பேத்கரும் ராமானுஜரைப் புகழ்ந்தார். ஜன்தன் கணக்குகள் அல்லது ஸ்வச் பாரத் திட்டம் எதுவாக இருந்தாலும் சரி, எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் பயனடைந்துள்ளனர்.
இன்று சர்தார் பட்டேலின் ஒற்றுமைக்கான சிலை ஒற்றுமையின் செய்தியைக் கொடுக்கிறது, அதே நேரத்தில் ராமானுஜரின் சமத்துவச் சிலை சமத்துவச் செய்தியை அளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: ராமானுஜர் பொற்சிலைத் திறப்பு- முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!