டெல்லி: விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு கௌஷல் தீக்ஷாந்த் சமரோவில் தொழில்துறை பயிற்சி நிறுவன மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று (செப் 18) உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, "விஸ்வகர்மாவின் பிறந்தநாளில் மாணவர்கள் தங்கள் திறமையால் புதுமையின் பாதையில் முதல் அடி எடுத்து வைக்கிறார்கள். உங்கள் ஆரம்பம் எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உங்கள் நாளைய பயணமும் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
கடினமாக உழைக்கும் ஒவ்வொரு நபருக்கும் விஸ்வகர்மா ஜெயந்தி மரியாதை, அது உழைப்பின் நாள். இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கும், புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கும் அரசாங்கம் முதன்மையான முன்னுரிமை அளித்து வருகிறது. நம் நாட்டில் முதல் ஐடிஐ 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அடுத்த 70 ஆண்டுகளில், 10 ஆயிரம் ஐடிஐக்கள் உருவாக்கப்பட்டன. எங்கள் ஆட்சியின் 8 ஆண்டுகளில், நாட்டில் 5 ஆயிரம் புதிய ஐடிஐக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் ஐடிஐக்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐடிஐக்களில் கோடிங், ஏஐ, ரோபோடிக்ஸ், 3டி பிரிண்டிங், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் டெலிமெடிசின் தொடர்பான பல படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய சக்தி மற்றும் மின்சார வாகனங்கள் துறையில் இந்தியா முன்னணியில் இருப்பதால், இதுபோன்ற துறைகள் தொடர்பான படிப்புகள் நமது பல ஐடிஐக்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு இளைஞனுக்கு கல்வி மற்றும் திறன் ஆற்றல் இருந்தால், அவனது தன்னம்பிக்கை தானாகவே அதிகரிக்கிறது. இலக்கு முன்னால் உள்ளது, நீங்கள் அந்த திசையில் செல்ல வேண்டும். இன்று நாடு உங்கள் கையைப் பிடித்துள்ளது, நாளை நீங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
உலகின் பல பெரிய நாடுகளுக்கு அவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், தங்கள் வேகத்தைத் தக்கவைக்கவும் திறமையான பணியாளர்கள் தேவை. நீங்கள் முன்னேறுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் மேலும் உங்கள் திறமையால், புதிய இந்தியாவின் சிறந்த எதிர்காலத்திற்கு நீங்கள் வழிகாட்டுவீர்கள். இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற, இந்திய இளைஞர்கள் கல்வியிலும் திறமையிலும் சமமான தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எனது பிறந்த நாளில் லட்சக்கணக்கான தாய்மார்களின் ஆசிர்வாதம் கிடைப்பதில் மகிழ்ச்சி... பிரதமர்