கவுகாத்தி: நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த 2 மாதங்களாக கொளுந்துவிட்டு எரியும் வன்முறைத் தீ இன்றும் அணையவில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், மணிப்பூர் மக்கள் புதிய மோதல்களைச் சமாளித்து வருகின்றனர். இதற்கிடையே, மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங், வெள்ளிக்கிழமை (ஜுன் 30ஆம் தேதி) பிற்பகலில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று செய்திகள் வெளியாகின.
மறுப்பு: பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் வன்முறைச் சூழலைக் கட்டுப்படுத்தத் தவறியதால், முதலமைச்சர் என். பிரேன் சிங், ஆளுநர் அனுசுயா உகேயை ஜூன் 30ஆம் தேதி மாலை 3 மணிக்குச் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், இந்த தகவல்களை பொய்யாக்கும் வகையில், அனைத்து ஊகங்கள் மற்றும் ஊடக அறிக்கைகளை நிராகரித்து, முதலமைச்சர் என் பிரேன் சிங், தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவது இல்லை என்று ட்விட்டர் பதிவில் உறுதிபடத் தெரிவித்து விட்டார்.
முதலமைச்சர் பிரேன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவரது இல்லம் முன்பு, ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என ஆதரவாளர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி பிரேன் சிங்கை வலியுறுத்தினர்.
மைதேய் மற்றும் குக்கி சமூக மக்களுக்கு இடையே நடைபெற்ற இன மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 3000க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். இந்த வன்முறை நிகழ்வுகளின் போது, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதால், மலைப் பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், நிவாரண முகாம்களில் தங்கள் வாழ்க்கையை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கழித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருந்து, நிலைமையை ஆய்வு செய்த போதிலும், இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்படவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. வன்முறைச் சம்பவத்தின் எதிரொலியாக, பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகளும் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டன.
மணிப்பூர் முதலமைச்சராக, பிரேன் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார். 2017 முதல் 2022ஆம் ஆண்டில், மணிப்பூர் மாநிலத்தின் 12வது முதலமைச்சராகப் பணியாற்றி இருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்குப் பிறகும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில், என் பிரேன் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.