டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான பதிவு தொடங்கியுள்ளது.
நாட்டில் இதுவரை 14.78 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 102ஆவது நாளான நேற்று (ஏப்.28) 25,56,182 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 22,989 அமர்வுகளில் 15,69,000 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இரண்டாம் கட்டமாக 9,87,182 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சுகாதாரப் பணியாளர்கள் 93,47,775 பேர் முதல் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதேபோல் 61,06,237 சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாம் கட்டத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
முன்களப் பணியாளர்களில் 1,22,21,975 பேர் முதல் கட்ட கரோனா தடுப்பூசியையும், 65,26,378 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்கள் மருத்துவர்களுக்கு முதல் கட்டமாகவும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது கட்டமாகவும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது கட்டமாகவும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த பதிவு செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.
அதற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த பதிவின்போது பல மாநிலங்களில் இணையதளம் சரியாக வேலைசெய்யவில்லை என்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்ய முயன்றவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.