புதுச்சேரியில் கரோனா அதிகரிப்பு காரணமாக, ஏப்ரல் 27ஆம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த 40 நாள்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனையும் அதிகரித்தது.
இதையும் மீறி ஒரு சிலர் மது கிடைக்காததால் சானிடைசர் போன்றவற்றைக் குடித்து உயிரிழந்தனர். எனவே உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையிலும், மாநில வருவாயைப் பெருக்கும் வகையிலும் மதுக்கடைகளை கரோனா விதிகளுக்குட்பட்டு திறக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (ஜுன்.08) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 நாள்களுக்குப் பிறகு இன்று காலை புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியைக் கடைபிடித்து மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர்.
இச்சூழலில், மதுபானக்கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுபானக் கடை உரிமையாளர்கள் ஆன்லைன் செயலி மூலமும், போன் மூலமும் விவரங்களைப் பெற்று, மதுபானங்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.