மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் நேற்று (ஜனவரி 10) ரூ. 28.1 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், அதைக் கொண்டுவந்த பயணியை கைது செய்தனர். எத்தோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வரும் விமானத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக மும்பை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அப்போது நைனிடாலை சேர்ந்த பயணியின் டஃபிள் பையில் (கைப்பை) 2.81 கிலோ போதைப்பொருள் சிக்கியது. இதனை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பையை டெல்லியில் கொண்டு சேர்த்தால் பல லட்சம் பணம் தருவதாக சொல்லி கொடுத்தாகவும், அதில் போதைப்பொருள் இருக்கும் என்பது எனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த 2.81 கிலோ போதைப்பொருள் கொக்கைன் என்பதும் அதன் மதிப்பு ரூ. 28.1 கோடி என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனவரி 6ஆம் தேதி இரண்டு வெவ்வேறு விமானங்கள் மூலம் மும்பை வந்த பயணிகளிடம் ரூ.31.29 கோடி மதிப்பிலான 4.47 கிலோ ஹெராயின் மற்றும் ரூ.15.96 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல ஜனவரி 4ஆம் தேதி, நைரோபியில் இருந்து வந்த பயணியிடம் 4.47 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த 10 நாள்களில் 13.73 கிலோ கடத்தல் தங்கம், ரூ.1.5 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: MV Ganga Vilas: சொகுசு கப்பலின் டிக்கெட் விலை இவ்வளவா?