டெல்லி : நடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 19 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில் தபால் நிலைய மசோதா, காஷ்மீர் இடஒதுக்கீடு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இதுவரை நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி மக்களவை கூடிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் அதானி நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பணம் வாங்கியதாக, பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே புகார் எழுப்பிய நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை அளித்து இருந்தது.
அறிக்கையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு இருந்த நிலையில், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர், மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கையை அவையில் தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையை அவை ஏற்றுக் கொள்வதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால் அவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து அவையை டிசம்பர் 11ஆம் தேதி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
இந்நிலையில், நாளை (டிச.11) இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் அவை மீண்டும் கூடுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் காலை 10 மணிக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் அறையில் ஒன்று கூடி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், பாஜக எம்.பிக்கள் அவைக்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் எம்.பிக்கள் ஊழல் செய்வதை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் காந்தி சிலை முன் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
அண்மையில் ஒடிசாவை சேர்ந்த தனியார் மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏறத்தாழ 400 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரி சோதனை நடந்த நிறுவனம் காங்கிரஸ் எம்.பிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Exclusive | "காங்கிரஸ் ஒருபோதும் மக்களை ஏமாற்றாது" - இமாச்சல் முதலமைச்சர் ஈ.டிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி!