டெல்லி: செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். ஆனால், இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் என்னென்ன விவாதிக்கப்படவுள்ளன என்ற விவரங்களை அவர் அறிவிக்கவில்லை.
இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், இந்த சிறப்புக் கூட்டத் தொடர், கேள்வி நேரம் இல்லாமல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் 75வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்தும், ஜி20 மாநாடு குறித்தும், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முழக்கத்தை மத்திய அரசு மீண்டும் கையிலெடுத்துள்ளதால், இது தொடர்பாக சிறப்புக் கூட்டத் தொடரில் மசோதா அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும்.
ஆனால், தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படவுள்ளது. இது சற்று அசாதாரணமானதுதான் என்றாலும் கூட, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏதேனும் அசாதாரண சூழல் நிலவினாலோ அல்லது முக்கியமான கொண்டாட்டங்களுக்காகவோ நாடாளுமன்றத்தில் சிறப்புக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 1962ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்தியா - சீனா போர் நிலவரம் குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு அம்பேத்கரின் 125வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 1997ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது. கடந்த 1992ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்புக் கூட்டம் கேள்வி நேரம் இல்லாமல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்த அமர்வில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' போன்ற சர்ச்சைக்குரிய மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அவ்வாறு இதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தினாலும், அதனை சட்டமாக்குவது மிகவும் கடினம். இதில் ஏராளமான சவால்கள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால், இது சாத்தியற்றது என்று கூட கூறலாம்.
ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த ஆலோசிக்கப்பட்டால், பல மாநில அரசுகள் தங்களது பேரவை விதிகளை மாற்றம் செய்ய நேரிடும், பல மாநிலங்கள் தங்களது பிராந்திய அடையாளத்தை துறக்க நேரிடும். இதனால், இந்த மசோதாவை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல்களை இணைத்து நடத்த மத்திய அரசு முயற்சி செய்யலாம். இதன் மூலம், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற பெரிய நடவடிக்கையை நோக்கி சிறிய அடி எடுத்து வைக்க மத்திய அரசு முயற்சிக்கலாம்.
சர்வதேச அளவில் பார்த்தால், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இந்தோனேசியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில், இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறை அமலில் உள்ளது. இந்த முறை இந்தியாவுக்கு சரியாக இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.