டெல்லி: நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லலித் ஜாவின் காவலை, மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று (டிச.22) உத்தரவிட்டுள்ளது. டெல்லி காவல்துறை தரப்பில், குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக லலித் ஜா உள்பட மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள், அடிக்கடி சந்தித்து நாடாளுமன்றத்தில் நுழைவதற்கான திட்டங்களைத் தீட்டியதாகவும், லலித் ஜா உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நாட்டில் அமைதியைக் கெடுக்கவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற இது போன்ற பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த குற்றச் சம்பவத்தை மறைக்க குற்றவாளிகள் தங்களது செல்போன்களை அழித்துள்ளனர் என தெரிவித்தார். டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அகந்த் பிரதாப் சிங் கூறும்போது, “இந்த சதித் திட்டத்தின் உண்மையை அறிய விசாரணை தேவை. நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பின் உள்ள உண்மையைக் கண்டறிய வேண்டும். இந்த சதித் திட்டத்தில் வேறு நாடுகள் தொடர்பு உள்ளதா என கண்டறிய வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.
இதனையடுத்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற நீதிபதி ஹர்தீப் கவுர், 2024 ஜனவரி 5ஆம் தேதி வரை லலித் ஜாவின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடந்த தேதியில், புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவரும் மஞ்சள் நிற வாயு அடங்கிய பொருளைக் கொண்டு, நாடாளுமன்ற கூட்ட அரங்கைத் தாக்கியுள்ளனர். அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே நீலம் மற்றும் அமோஸ் ஆகிய இருவரும் வாயு நிறைந்த பொருட்களை வைத்து தாக்கியுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு காவல்துறையின் காவலில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு துணை காவல் ஆணையர்கள் மற்றும் கூடுதல் காவல் ஆணையர்கள் உள்பட மூத்த காவல் அதிகாரிகள் லலித் ஜாவிடம் விசாணை நடத்தியுள்ளனர். இதில், ராஜஸ்தானிலுள்ள ஹோட்டலில் லலித் ஜா செய்தி தொலைக்காட்சி மூலம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. மேலும் விவரங்களை அறிய, டெல்லி சிறப்பு காவல்துறையினர் 6 குழுக்களை அமைத்து, லக்னோ, மைசூர், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இடங்களில் சோதனை செய்யச் சென்றனர்.
இந்த விசாரணையில், நாடாளுமன்றத்தில் செருப்புகளை சோதனை செய்வது இல்லை என்பதைக் கண்டறிந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள், இரண்டு ஜோடி செருப்புகளைத் தயாரித்து, அதற்குள் வாயு நிறைந்த பொருளை மறைத்து வைத்து நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பேரிடர் காலங்களில் மத்திய அரசு வழங்கிய நிதி இவ்வளவு தான்... பட்டியல் வெளியிட்ட தமிழக அரசு!