மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே உள்ள கோண்ட்வா பகுதியில், சஞ்சய்- ஷிடல் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் மகன் இருக்கிறான். இவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட நாய்களை வளர்ப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த 11 வயது சிறுவன் ஒரே அறையில் நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுவனின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவனை மீட்க வேண்டும் என்றும் சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த ஆர்வலரான அபர்ணாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அபர்ணா போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்றார். போலீசார் ஆய்வு செய்ததில், சிறுவன் ஒரே அறையில் 22 நாய்களுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், சிறுவன் நாய்களைப் போல நடந்து கொண்டதாகவும், அவனது குணாதிசயங்கள் மாறுபட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். முறையான பராமரிப்பு இல்லாமல், சுகாதாரமற்ற இடத்தில் நாய்களை அடைத்து வைத்திருந்ததால், நாய்களும் ஆக்ரோஷமாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். பெற்ற மகனை நாய்களுடன் அடைத்து வைத்து துன்புறுத்திய பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:தனியார் மதுபான கடை மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீச்சு - புதுச்சேரியில் பரபரப்பு