நாட்டின் தலைநகர் டெல்லியில் வெப்ப நிலை ஆறு டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியிருந்த நிலையிலும், அந்த கடும் குளிரை பொருட்படுத்தாமல் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டு தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அணிவகுப்பு ஒத்திகையின்போது, முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை ராணுவ வீரர்கள் கடைபிடத்தனர். ஒத்திகையை பார்க்க குவிந்திருந்த மக்கள், தங்களின் மொபைல் போன்களில் அதனை படம் எடுத்துக் கொண்டனர்.
மும்பையை பூர்வீகமாக கொண்ட ராஜ் இதுகுறித்து கூறுகையில், "இதுபோன்ற ராணுவ அணிவகுப்பை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. எனவே, அது எங்களுக்கு பெருமையாக உள்ளது. மும்பை போல் அல்லாமல், டெல்லி கடும் குளிர் வாட்டி வதைக்கிறது" என்றார்.
இதுகுறித்து டெல்லி உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "டெல்லியில் மிகக் குளிராக உள்ளது. நடக்க முடியவில்லை. ராணுவ வீரர்கள் அணுவகுப்பு ஒத்திகையில் கலந்து கொள்வது பெருமை அளிக்கும் விதமாக உள்ளது" என்றார்.
குடியரசு தினத்திற்கு இன்னும் 9 நாள்களே உள்ள நிலையில், சிறப்பான அணுவகுப்பை பறைசாற்ற ராணுவ வீரர்கள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.