கரோனா தொற்று நோய் நீண்டகாலமாக ஒருவருக்கொருவரை சந்திக்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது. இதனால் மனித உறவுகளுக்கிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு இச்சூழ்நிலை ஆனந்தமாக மாறியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சங்கர் என்பவர் தனது பெற்றோரிடம் வந்து சேர்ந்துள்ளார். தனது 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். ஹொங்கேர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவரது பெற்றோர் ராஜேகவுடா, அக்கயாமா பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முன்னதாக அவர் காணாமல் போனது குறித்து காவல் துறையினரிடம் அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். ஒரு ஆண்டுக்கும் மேல் அவர் கிடைக்காததால் நம்பிக்கை இழந்து, அவரைத் தேடுவது வீண், அவர் இறந்து விட்டதாக நினைத்துள்ளனர். தற்போது மகனை உயிருடன் பார்க்கும் போது மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.