ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் கைதியான முகமது அலி ஹூசைன், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக செயல்பட்டவர். இவர் ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்துவதில் முக்கியமானவர். இதனிடையே அர்னியா ஆயுதம் வீசியதில் தனது பங்கை ஒப்புக்கொண்ட ஹூசைன், கைவிடப்பட்ட ஆயுதங்களை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இரண்டு இடங்களை கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் ஒரு மாஜிஸ்திரேட்டுடன் காவலர் குழு கைதியை அழைத்துச் சென்றது. முதல் இடத்தில் எந்த பொருளும் மீட்கப்படவில்லை. அடுத்ததாக சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள அர்னியாவின் டோப் கிராமத்தில் புதைக்கப்பட்ட ஒரு பாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாக்கெட்டை திறக்கும் போது, பாகிஸ்தான் கைதி காவலர் ஒருவரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு, காவலரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதில் ஒரு கான்ஸ்டபிள் காயமடைந்தார். மேலும் தப்பியோட முயன்ற கைதியை பிடிக்க நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் கைதியும் படுகாயமடைந்தார்.
பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தப்பியோட முயன்ற கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேநேரம் காவலர் தீவிர சிகிச்சையில் உள்ளார். மேலும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் பாக்கெட்டுகளை வெடிகுண்டு செயலிழக்க படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் குடியிருப்புப்பகுதியில் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு