டெல்லி: இந்தியாவின் முன்னாள் குடிமையியல் பணியில் இருந்த 100 அலுவலர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் வெளிப்படையான வெறுப்பு அரசியல் நிகழ்த்தப்படுவதாகவும், அதனை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த வெறுப்பு அரசியல் எனும் பலிபீடத்தில் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லீம்கள் மட்டுமில்லாமல் இந்திய அரசியலமைப்பு சாசனமே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் உள்ளிட்ட 108 பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.
நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களான அஸ்ஸாம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் முஸ்லீம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளும், நடைமுறைகளும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளன.
மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டெல்லி காவல் துறை இருப்பதால் அங்கும் இதே நிலையே உள்ளது. பெரும்பாலும் அவர்கள் இது போன்ற பொதுப் படையான நிகழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல் இருந்ததாகவும், இருப்பினும் இந்த நடைமுறை இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனத் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்தக் கடிதத்தின் மூலம் உங்கள் அணுகு முறையும் அந்த வெறுப்பு அரசியலும் மாறும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:வீடியோ: பட்டியலின புதுமணத் தம்பதிக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு