துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் பாதுகாப்பிற்காக, ஆளுநர் மாளிகையை சுற்றியுள்ள ஆசிரமம், சட்டப்பேரவை, மணக்குள விநாயகர் கோயில், ரோமண்ட் நூலகம் ஆகியவை அமைந்துள்ள சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அவதியடைவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி நேரில் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து, மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், கூடுதல் காவல்துறை தலைவர் ஆனந்த மோகன் ஆகியோரும் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ”பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு மாநிலம் திரும்பியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற பலமுறை கெடு விதித்தும் அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தவில்லை.
இதையடுத்து உடனடியாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை இன்னும் மூன்று நாட்களுக்குள் அகற்ற, காவல்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெங்களூரு கலவர வழக்கில் முன்னாள் மேயருக்கு பிணை!