டெல்லி : ஒன்றிய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுக்க தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிறப்பு அனுமதி பெற்று போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த விவசாயிகளை நேரில் சந்தித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (ஆக.6) ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக டெல்லி ஜந்தர் மந்தர் விவசாயிகள் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, லோக்தன்ரிக் ஜனதா தளம் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன.
முன்னதாக மாநிலங்களவையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல், விலைவாசி உயர்வு, பெகாசஸ் மென்பொருள் வாயிலாக வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், தீபேந்தர் பூடா ஆகியோர் இரு அவைகளிலும் முறையே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
ஜந்தர் மந்தரில் விவசாயிகள் விவசாயிகளை காப்போம், நாட்டை காப்போம் உள்ளிட்ட பதாகைகளை கைகளில் தாங்கியிருந்தனர்.
முன்னதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, சட்டத்தை மாற்றுங்கள்- பிரியங்கா காந்தி!