சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில், புதியதாக நேற்று (ஜூலை 7) 43 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இதில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவை விரிவாக்கம் என்பதால் இதுகுறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுகவின் ஒற்றை மக்களவை உறுப்பினராக இருக்கும், ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற தகவல் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், அவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால், அதிமுகவில் சற்று ஏமாற்றம் எதிரொலித்தது. இருப்பினும், எந்தவித அதிருப்தியும் இன்றி ஓ.பி. ரவீந்திரநாத் முதல் ஆளாக ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்,
அந்த ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின்கீழ் பதவியேற்கும் புதிய அமைச்சர்கள் எல்லோருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வானதற்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை