பிவானி (ஹரியானா): ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா (Om Prakash Chautala) 10ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கில பாடத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து ஹரியானா பள்ளி கல்வி வாரியத்தின் தலைவர் டாக்டர். ஜக்பீர் சிங் (Dr Jagbir Singh) கூறுகையில், “ஓம் பிரகாஷ் சௌதாலா ஆங்கிலத்தில் 100க்கு 88 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 86 வயதில் ஹரியானா மாநிலத்தில் ஒருவர் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவது இதுவே முதல்முறை” என்றார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஓம் பிரகாஷ் சௌதாலா 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். அவருக்கு 14 வயதான ஒன்பதாம் வகுப்பு மாணவரான மல்கித் தேர்வெழுத உதவினார். அவரது வயது முதிர்வு மற்றும் அவரது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு தேர்வெழுத உதவியாளர் நியமிக்கப்பட்டது.
சௌதாலா ஏற்கனவே திறந்த நிலை பல்கலையொன்றில் 2017இல் உருது, அறிவியல், சமூக அறிவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் கீழ் 53.40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் பிரகாஷ் சௌதாலா 12ஆம் வகுப்பு தேர்வும் எழுதியிருந்தார். அதில் அவர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறாததால் அந்த தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : மொட்டையடிக்க கட்டணமில்லை, வள்ளலார் சர்வதேச மையம்; அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் 112 புதிய அறிவிப்பு