ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முடிவுகள் டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. பிகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, இத்தேர்தலுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஹைதராபாத்தில் பரப்புரையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரையில் ஈடுபட்டார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டதை கடுமையாக விமர்சித்த ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி, பரப்புரைக்கு இன்னும் ட்ரம்ப்தான் அழைத்துவரப்படவில்லை என தெரிவித்தார். லங்கர் மாளிகையில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், "இது ஹைதராபாத்துக்கான தேர்தல் போல் தெரியவில்லை.
பிரதமர் தேர்தலில் மோடியை தேர்ந்தெடுப்பது போல் உள்ளது. கர்வானில் பரப்புரையில் ஈடுபட்டபோது, பரப்புரைக்கு ட்ரம்ப்பை அழைத்திருக்கலாம் என ஒரு குழந்தை தெரிவித்தது. ஆம், ட்ரம்ப்பை தவிர மற்ற அனைவரையும் பாஜக பரப்புரைக்கு அழைத்துள்ளது" என்றார்.