கவுதம புத்த நகர்: கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாய்மாமாவுக்கு உதவுமாறு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அவசர உதவி தேவை! கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட தாய் மாமாவுக்கு ஒரு ஊசி தேவை. தயவுசெய்து உதவி செய்யுங்கள். அவரது நிலை மிகவும் மோசமாகவுள்ளது " என்று குறிப்பிட்டுள்ளார். பதிவுடன் அவர் ஒரு தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பதிவுக்குப் பின்னர், கவுதம புத்த நகராட்சி தகவல்துறை, நோய் பாதிப்புக்குள்ளான தங்களின் உறவினருக்கு உதவுவதற்கு ஒரு குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, ஒமர் அப்துல்லாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு, இறப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.89 லட்சத்தை எட்டியுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,055 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொற்றால் 223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று பாதிப்பு, இறப்பு எண்ணிக்கையானது, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.