ஆந்திராவில் நாளுக்கு நாள் கரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. சிலர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே, உயிரிழக்க நேரிடுகிறது. மேற்கு கோதாவரி மாவட்டத்திலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பாபு (63) என்பவர், தனது மருமகன் வீட்டில் தங்கியிருந்தார். இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் உள்ளிட்ட பிற உடல் நலப்பிரச்னைகள் இருந்துள்ளன. இதையடுத்து கடந்த 4ஆம் தேதி கரோனா சோதனை செய்துள்ளார். பரிசோதனை முடிவு வந்த பின்னர் மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள காத்திருந்த ராம்பாபுவிற்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது மருமகன் நரசிம்ஹுலுவை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, தனது இரு சக்கர வாகனத்தில் ராம்பாபுவை அமர வைத்து நரசிம்ஹுலு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சிறிது தூரம் சென்ற நிலையில், ராம்பாபு எவ்வித அசைவுமின்றி இருந்திருக்கிறார். இதனால் அச்சமுற்ற நரசிம் விரைந்து மருத்துவமனைக்கு சென்று, ராம்பாபுவை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் ராம்பாபு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.