பாலசோர்: ஒடிசா மாநிலத்தில் பாலசோர் - பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று (ஜுன் 2) இரவு 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டு சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. தற்போது வரை இந்த விபத்திற்கான மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா கூறுகையில், "ரயிலின் ஒரு பொது பெட்டி அதிகளவில் சேதமடைந்துள்ளது. அதாவது மற்றொரு பெட்டி அதன் மீது ஏறியிருப்பதால் மீட்புப் பணிக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், மீட்புப் பணிக்காக ரயில்வே கிரேன் தேவைப்படலாம்.
இதுவரை ரயில் விபத்தில் 238 பயணிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் பாலசோர், மயூர்பஞ்ச், கட்டாக் எஸ்சிபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்” என்றார்.
மேலும், நேற்று விபத்து நடந்த இடத்தில் அருகில் இருந்த பொதுமக்கள் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். அதாவது "பல தன்னார்வலர்கள் முன்வந்து உதவி செய்கின்றனர். தற்போது வரை பாலாசோரில் 900 யூனிட் இரத்தம் கையிருப்பில் உள்ளது. உள்ளூர் மக்களின் பெரும் நன்கொடையைத் தொடர்ந்து, பத்ராக் மற்றும் கட்டாக்கிலும் தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்வதற்கு தயாராக இருந்தனர்.
அதனடிப்படையில், நேற்று இரவில் இருந்து அப்பகுதி மக்கள் விடிய விடிய ரத்த தானம் செய்தனர். இதுவரை சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக கிடைத்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் செயல்முறை மற்றும் பிரேத பரிசோதனை ஏற்கனவே தொடங்கி உள்ளது" என்றார்.
மேலும் இது குறித்து தென்கிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ரயில் எண் - 12841 ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண் 12864 எம் விஸ்வேஸ்வரய்யா - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் பஹானாகா பஜார் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஜூன் 2 அன்று சுமார் 6.55 மணியளவில் கரக்பூர் மற்றும் பத்ரக் ரயில் நிலையத்தில் இருந்து மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதுவரை கிடைத்த தகவலின்படி, 238 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 650 காயமடைந்த பயணிகள் கோபல்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
மேலும், தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் பிற முதன்மை அதிகாரிகள் போன்றோர் மீட்புப் பணி தளத்தில் உள்ளனர். தற்போது அங்குள்ள பயணிகளுக்குத் தேவையான தண்ணீர், தேநீர் மற்றும் உணவு ஆகியவை காரக்பூர் நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.