புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ”புதுச்சேரி நகராட்சி கட்டடம் கட்டுவதில், மத்திய அரசு பங்கு எதுவுமில்லை. அதற்கு எங்களது ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும், கட்டடம், பாலம் திறக்கும் போது யாரை அழைக்க வேண்டும் என்று துறையின் அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில் நகராட்சி கட்டடத் திறப்பு விழாவில், மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறி, நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தள்ளி வைத்துள்ளார். குறிப்பாக, தன்னை அழைக்கவில்லை என்ற உள்நோக்கத்துடன் அவர் இதனை செய்துள்ளார். இவ்விவகாரத்தில், மத்திய அரசின் நிதி எங்குள்ளது என ஆளுநர் கிரண்பேடி மாநில மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். முதல்வர் நிவாரண நிதியில் எந்தத் தவறும் நடக்கவில்லை. அது சார்ந்த எந்த விசாரணைக்கும் தயார். ஆளுநர் மாளிகை ஒர் மர்ம பங்களவாகவே உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலரும், ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான லட்சுமி நாராயணன், ”மேரி கட்டடத்தை திறக்க ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை எனில், ஒரு சில நாட்களில் ராஜ்பவன் தொகுதி மக்கள் சார்பாக நாங்களே திறப்போம். ஜக்கி வாசுதேவ் பங்கேற்ற நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நடந்ததே, அது யாருடைய பணத்தில் நடந்தது என்பதை கிரண்பேடி விளக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கல்யாணராமனுக்குக் கல்யாண சாப்பாடு ரெடி!