சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, WDP4B, WDP4D வகுப்பு என்ஜின்களை, வரலாற்றில் இடம்பிடித்த பெண் போராளிகளுக்கு வடக்கு ரயில்வே அர்ப்பணித்துள்ளது. உதய் தேவி, அஹில்யா பாய், அவந்தி பாய், லட்சுமி பாய், வேலு நாச்சியார், சென்னம்மா, ஜல்கரி பாய் உள்ளிட்ட பெண் ஆளுமைகளின் பெயர்கள் ரயில் என்ஜின்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்புத் துறை அலுவலர் தீபக் குமார் கூறுகையில், "சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தடம்பதித்த பெண் போராளிகளை நினைவுகூரும் வகையில் கடந்த 50 ஆண்டு காலமாக, துக்ளகாபாத் ஷெட் இயங்கிவருகிறது.
பெண்களைக் கவுரவப்படுத்தும் வகையில் துக்ளகாபாத் ஷெட்டில் தயாரிக்கப்பட்ட என்ஜின்களை அவர்களுக்கு வடக்கு ரயில்வே அர்ப்பணித்துள்ளது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் சாதனைகளைப் போற்றும்வகையில் சர்வதேச பெண்கள் நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. பெண்களுக்கான சம உரிமையை நிலைநாட்டவும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது" என்றார்.