ஆக்ரா: காதல் நினைவுச்சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹால், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. உலக அதிசயங்களில் இடம்பிடித்த தாஜ்மஹாலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர். தாஜ்மஹாலைக் காண இந்தியர்களிடம் கட்டணமாக ரூ.50, சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளை சேர்ந்தவர்களிடம் ரூ.540 வசூலிக்கப்படுகிறது. பிற நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் ரூ.1,100 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. 15 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கட்டணம் இல்லை.
இந்நிலையில் ஷாஜகானின் 368-வது நினைவுதினத்தையொட்டி (உர்ஸ் விழா) வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை, பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக கண்டுகளிக்கலாம் என உர்ஸ் குழுவின் தலைவர் இப்ராஹிம் சைதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஷாஜகானின் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு நினைவுதினத்தையொட்டி, 3 நாட்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தாஜ்மஹாலை காண கட்டணம் செலுத்த வேண்டியதில்லை" என்றார்.
நடப்பாண்டு உர்ஸ் விழாவையொட்டி, ஷாஜகானின் நினைவிடத்தில் 1,450 மீட்டர் நீளம் கொண்ட சதார் போர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உர்ஸ் விழா நடைபெறும் 3 நாட்களும் தாஜ்மஹால் வளாகத்துக்குள் சிகரெட், புகையிலைப் பொருட்கள், பேனர், புத்தகம் உள்ளிட்டப் பொருட்களைக் கொண்டு செல்ல தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.
முகலாயர் ஆட்சியில் 5-வது மன்னரான ஷாஜகான் 1628-ம் ஆண்டு முதல் 1658ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். தனது காதலியும் துணைவியுமான மும்தாஜின் நினைவாக தாஜ்மஹாலை அவர் கட்டினார். ஷாஜகான் ஆட்சிக் காலத்தில் தாஜ்மஹால் மட்டுமின்றி ஏராளமான நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டுள்ளன. 1666-ம் ஆண்டு தனது 74-வது வயதில், ஷாஜகான் மரணம் அடைந்தார்.
இதையும் படிங்க: BBC IT Raid: டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு!