வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 100 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை முன்வைத்து, ஹரியானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.
தீர்மானத்தின் மீது 6 மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 55 பேர் வாக்களித்தனர். இதன் காரணமாக, நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில், பாஜகவுக்கு 40 உறுப்பினர்களும் அதன் கூட்டணி கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சிக்கு 10 உறுப்பினர்களும் உள்ளனர். ஏழு சுயேச்சை உறுப்பினர்களில் 5 பேர் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.